CRIME
“பாப்பா வா சிப்ஸ் வாங்கி தாரேன்..” 2 வயது சிறுமியை மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று.. 48 வயது மிருகம் செய்த கொடூர காரியம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள கேவதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இரண்டு வயது சிறுமிக்கு எதிராக 48 வயது நபர் ஒருவர் நிகழ்த்திய கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருவிழா காண்பிப்பதாகவும் மற்றும் சிப்ஸ் வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, அந்த நபர் சிறுமியை அவளது வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் குழந்தை வீடு திரும்பாததால் தேடிச் சென்ற குடும்பத்தினர், மாந்தோப்பில் படுகாயங்களுடன் இரத்தம் வழிந்த நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் அச்சிறுமி, தற்போது அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த விபரீத சம்பவம் குறித்துத் தெரிந்ததும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தப்பியோட முயன்ற 48 வயதுடைய அக்குற்றவாளியைச் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்துக் கடுமையாகத் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது அக்குற்றவாளி தனது கொடூரச் செயலை ஒப்புக்கொண்டதாகத் தர்பங்கா துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.கே. சுமன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை கிடைக்கச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
