LATEST NEWS
ஆந்திர அமைச்சரைத் தெறிக்கவிட்ட தமிழக அமைச்சர் கீர்த்தனா.. “இன்னும் 4 நாட்கள்தான்… களத்தில் காட்டுகிறோம்..” பரபரப்புப் பதிவு..!!
அண்டை மாநிலத்திற்குத் தரவுகள் கசிந்ததாகவும், தமிழ்நாட்டின் முதன்மை முதலீட்டு நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாட்டில் சில அதிகாரிகள் ராஜினாமா செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் ஆந்திராவிற்குச் செல்வது குறித்துத் தனது X தளப்பக்கத்தில், கிண்டல் செய்யும் வகையில் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் பதிவிட்ட நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதமாகத் தற்போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தனது X தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் ராஜினாமா செய்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. இது தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் ஊழியர்கள் 15 பேர் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். ஹவாஷின், சியோயான் மற்றும் ஐவாமெட் ஆகிய மூன்று முக்கியத் தென் கொரிய வாகன உதிரிபாக நிறுவனங்கள், தமிழகத்திற்குச் சுமார் ரூ.1,614 கோடி மதிப்பில் வரவிருந்தது. இந்த முதலீடானது பின்னர் ஆந்திரப்பிரதேசத்திற்கு மாறியது குறித்துச் சர்ச்சை எழுந்த நிலையில் இதில் என்ன நடந்தது என்பது குறித்து, நவம்பர் 3-ம் தேதி அன்று தகவல் நம்பகத்தன்மை பிரிவில் இருந்து ஒரு விளக்கப்பதிவினைப் பதிவிட்டனர்.
அதன் பின்னர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 31-வது சிஐஐ கூட்டாண்மை மாநாடு நடைபெற்றது. அதில் ஆந்திர முதல்வரிடம் செய்தியாளர் ஒருவர், “தொழில் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுத்து ஆந்திரப் பிரதேசத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியதற்கு ஆந்திர முதல்வர், “உங்களுக்கு மசாலா வேண்டும், எனக்கு ரிசல்ட் வேண்டும்” என்று ஒரு பதிலினை அளித்தார். இதுவும் கூட மிகப்பெரிய சர்ச்சையாகப் பேசப்பட்டது. இந்நிலையில் தான் கைடன்ஸ் தமிழ்நாடில் இருந்து 15 ஊழியர்கள் ராஜினாமா செய்ததாக வந்த செய்தி பெரும் புயலைக் கிளப்பியது. 15 ஊழியர்களில் 3 பேர் ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் இணைந்துள்ளனர் என்று கூறப்பட்டது, தரவுகளைக் கசியவிட்டதாகக் கூறப்பட்ட செய்திக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது.
இதனை அடுத்து ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ தனது விளக்கத்தினை நேற்று வெளியிட்டது. 15 ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்ததாகவும் அதில் குறிப்பிட்டு விளக்கப் பதிவினைப் பதிவிட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், தனது X தளப்பக்கத்தில், “முக்கியச் செய்தி: ஆந்திரப் பிரதேசத்தின் அதி ரகசிய முதலீட்டுத் திட்டம் கசிந்துள்ளது. இதற்கு ‘முதலீட்டாளர்களுக்கு அன்றே பதிலளித்தல்’ என்று பெயர். இதைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். #SpeedOfDoingBusiness என்று சிரிக்கும் எமோஜியை அவர் பயன்படுத்திக் கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது X பக்கத்தில் ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சரின் பதிவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “விரைவான பதில்கள் நல்லது, ஆனால் அதைவிட வேகமான செயலாக்கமா? இன்னும் சிறந்தது! வெற்றி முதலீடு மற்றும் மாற்ற மாநாடு 2026-இன் 2-வது பதிப்பிற்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது! எங்கள் கவனம் தெளிவாக உள்ளது: முதலீட்டு உறுதிமொழிகள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான இலக்குகள், களத்தில் உள்ள திட்டங்கள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள். மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், முதலீட்டு உறுதிமொழிகளை உறுதியான விளைவுகளாக மாற்றுவதிலும், களத்தில் முடிவுகளை வழங்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இன்னும் 4 நாட்களே உள்ளன!. 25 நவம்பர் 2026” என்று பதிவிட்டுள்ளது தற்போது கவனத்தினை ஈர்த்துள்ளது.
