LATEST NEWS
யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..! கொளத்தூரில் களமிறங்கும் கனிமொழி..? பின்வாங்கும் ஸ்டாலின்… இழந்த கோட்டையை மீட்க திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையைக் கைப்பற்றி, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சியமைக்கத் தேவையான மேஜிக் நம்பர் 118 ஆகும்; இந்த மேஜிக் நம்பர் எப்போதுமே தவெக-விற்குப் பெரிய சிக்கலாகவே இருந்து வருகிறது. தவெக 233 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அவர் திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்ததை அடுத்து தவெக எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை 107 ஆகக் குறைந்தது.
ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவியதை அடுத்து கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் (5), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) மற்றும் இடதுசாரி கட்சிகளின் (CPI, CPI-M) ஆதரவுடன் தவெக கூட்டணி 118 என்ற மேஜிக் நம்பரைத் தாண்டி ஆட்சி அமைத்தது. இங்கேதான் ஒரு ட்விஸ்ட் நடந்தது; அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றுத் தனது பலத்தை 109 ஆகக் கூட்டியது.
இந்நிலையில், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் எம்.எல்.ஏ-க்கள் இன்றி காலியாக உள்ளன. முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட, கொளத்தூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மறைந்ததைத் தொடர்ந்து, காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு செப்டம்பர் 8, 2026 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான சட்டத் தடையும் தற்போது நீங்கியுள்ளது. இவ்வாறு தற்போது தமிழகத்தில் 6 தொகுதிகள் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அதே சமயம், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
தற்போது கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் அங்கு போட்டியிடுவாரா? என்பதே இப்போது உள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது. இரண்டு முறை வெற்றி பெற்ற ஒருவர் அந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; அந்தத் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி ஏற்கனவே கணிக்கப்பட்டது என்றும் சில பேச்சுகள் உள்ளன. முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் தவெக-வின் வி.எஸ். பாபு. இவர் திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்து, பின் தவெக கட்சியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி வென்றார்.
நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்களில், ஆதிக்கம் பெற்ற அதிமுக-வும், திமுக-வும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பிரச்சாரங்கள் செய்திருந்தன. என்ன பயன்? தாராபுரத்தில் தவெக எம்.எல்.ஏ சத்யபாமாவுக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததாகக் கூறப்பட்ட நிலையிலும்கூட, இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களே வெற்றி பெற்றதால், முன்பு ஆண்ட கட்சிகளின் கள ஆதரவு கேள்விக்குறியானது. நட்சத்திரத் தொகுதியான கொளத்தூரில், இடைத்தேர்தல் வேட்பாளராகப் பலம் மற்றும் பரிச்சயமான வேட்பாளரையே தவெக களமிறக்கும். அதற்கு ஈடுகொடுக்க மற்ற கட்சிகளும் இதைப் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது; அப்படி இருந்தால் மீண்டும் ஸ்டாலினைக் களமிறக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை மீண்டும் திமுக தோற்றால், அது மு.க. ஸ்டாலினுக்கு எதிராகக் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தும். மேலும், தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிகிறது; இந்தப் பிம்பத்தைத் திமுக பயன்படுத்துமா என்ற கேள்வியும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், காற்று யார் பக்கம் வீசுது என்று!
