LATEST NEWS
“மனிதநேயமே இல்லையா..” கஷ்டப்பட்டு 2வது மாடிக்கு ஏறிய மாற்றுத்திறனாளி டெலிவரி ஊழியர்.. வீட்டு வாசலுக்கு வந்ததும் ஆர்டரை கேன்சல் செய்த வாடிக்கையாளர்..! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!
உடல் ஊனமுற்ற ஸொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டு வாசலுக்கே உணவுப் பொட்டலத்தை டெலிவரி செய்வதற்காகப் படிகளில் ஏறிச் சென்றபோது, அவர் கதவருகே சென்றதும் அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்ட சம்பவம் இணையத்தில் கடும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டுகள் உள்ள அந்தக் கட்டிடத்தில் லிஃப்ட் வசதி இல்லாததால், தன்னால் படிகளில் ஏறி வருவது கடினம் என்பதை டெலிவரி ஏஜென்ட் முன்கூட்டியே வாடிக்கையாளரிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், வாடிக்கையாளர் 50 ரூபாய் மதிப்புள்ள மேகி பாக்கெட்டை வாங்க தங்களையா கீழே இறங்கி வரச் சொல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட்ட அந்த டெலிவரி ஊழியர், மிகுந்த சிரமத்திற்கு இடையில் உணவுடன் இரண்டாவது மாடி வரை நடந்து சென்றுள்ளார். ஆனால், அவர் வாடிக்கையாளரின் வாசலை அடைந்தபோது, அதற்குள் அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தார்; மேலும், ஆர்டர் ரத்து செய்யப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து தனது உழைப்பு வீணடிக்கப்பட்டதை வெளிப்படுத்தினார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், அடிப்படை மனிதநேயம்கூட இல்லாமல் உடல்ரீதியான சவால்களை எதிர்கொண்டு உழைக்கும் ஒருவர் மீதான இந்த அலட்சியப்போக்குக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/De05UdGNF6S/?utm_source=ig_web_button_share_sheet
இதற்கிடையில், கேமராமேன் ஏன் அவருக்கு உதவவில்லை என்ற கேள்விகளுக்கு டெலிவரி ஊழியர் விளக்கம் அளித்துள்ளார். தம்முடன் எப்போதும் படம்பிடிக்க ஆட்கள் யாரும் வருவதில்லை என்றும், அந்தச் சமயத்தில் அருகில் இருந்தவர்களிடம் தான் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், வாடிக்கையாளருக்குத் தன் நிலை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், உணவுப் பொட்டலத்தை வேறு யாரிடமாவது கொடுத்து அனுப்பினால் வாடிக்கையாளர் தரப்பில் புகார் எழுக்கூடும் என்பதால் தாமே நேரில் கொண்டு சென்றதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
