LATEST NEWS
“அடுத்த பிரதமர் பட்டியலில் விஜய்?” 9% ஆதரவுடன் 3வது இடம் பிடித்த தவெக தலைவர்.. இந்தியா டுடே கருத்துக்கணிப்பால் அதிரும் தேசிய அரசியல்..!!
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் “நிச்சயம் ஒரு நாள் தமிழர் ஒருவர் இந்தியப் பிரதமராவார்” என்று தெரிவித்துள்ள கருத்து, தேசிய மற்றும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழர்கள் பிரதமராக முடியுமா எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கன்னடர்களும் குஜராத்தியர்களும் பிரதமராகப் பதவி வகித்துள்ள நிலையில், ஜனநாயகம் அதற்கு வழிவகுத்துள்ளதால் ஒரு தமிழரும் அந்த உயர் பதவிக்கு வர முடியும் என்று உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவரின் இந்த அறிக்கை, தற்போதைய தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் தேசிய அளவிலான அரசியல் எழுச்சியுடன் ஒப்பிடப்பட்டு, தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடையே பெரும் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான இந்தியா டுடே-சிவோட்டர் கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமர் விருப்பப் பட்டியலில் விஜய் 9 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தவெகவினர் சி.பி. ராதாகிருஷ்ணனின் கூற்றை விஜய்யின் தேசிய வளர்ச்சிக்கான மறைமுக அங்கீகாரமாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து இதுவரை யாரும் பிரதமராகவில்லை என்றாலும், மூன்று பேர் ஜனாதிபதியாகவும், மூன்று பேர் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளனர் என்ற வரலாற்றுப் பின்னணியும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அண்மையில் தவெக ஆட்சி அமைந்தது முதற்கொண்டு, வட மாநிலங்கள் வரை முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பேச்சுகள் ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன. சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்த இந்த “தமிழர் பிரதமர்” என்ற விவாதம், தற்போது குடியரசுத் துணைத் தலைவரின் கருத்தால் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
