LATEST NEWS
“விஜய் அரசு எப்போது வேணாலும் கவிழும்!” – எடப்பாடி பழனிசாமி அதிரடி கணிப்பு… அனல் பறக்கும் பேச்சால் அரசியல் களத்தில் பரபரப்பு…!!
சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கட்சித் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்க முடியும் என்றும், ஆனால் தி.மு.க. மற்றும் த.வெ.க. தலைவர்களை அவ்வளவு சுலபமாக அணுக முடியாது என்றும் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து த.வெ.க.விற்குச் சென்றவர்களின் தற்போதைய நிலைமை அனைவருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் சூழ்நிலைகள் மாறும்போது அவர்கள் மீண்டும் தாய் கழகம் திரும்பினாலும், கட்சியில் அவர்களின் பயணம் ‘ஜீரோ’விலிருந்துதான் தொடங்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தனது எடப்பாடி தொகுதியில் தான் பெற்ற பிரமாண்ட வெற்றியை சுட்டிக்காட்டிய அவர், த.வெ.க. தலைவர் விஜய் தன் மீதே முழு நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் எனவும் விமர்சித்தார்.
அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் புகழையும், படங்களையும் பயன்படுத்தி த.வெ.க. வாக்கு சேகரித்ததால், அவர்களின் வெற்றியை ஒருக்காலும் உண்மையான வெற்றியாக ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் பதவிகள் வழங்கப்படுவதை கடுமையாக சாடிய அவர், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், ஆலோசகர்களுக்கும் முக்கிய அரசுப் பதவிகள் வழங்கப்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் முதலமைச்சருக்கு ஒப்பனை செய்பவருக்குக் கூட பதவி கிடைக்கலாம் என்றும் விமர்சித்தார். அதுமட்டுமின்றி, பொறுப்பேற்று 60 நாட்களே ஆன த.வெ.க. ஆட்சியில், முந்தைய தி.மு.க. ஆட்சியைப் போலவே சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்றெண்ணி விஜய் அளித்த சாத்தியமில்லாத பல வாக்குறுதிகளை, தற்போது அரசிடம் நிதி இல்லாததால் நிறைவேற்ற முடியாமல் திணறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய த.வெ.க. அரசு தனிப்பெரும்பான்மையுடன் அமையவில்லை என்பதை வலியுறுத்திய எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சி தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே இயங்கி வருவதாகக் கூறினார். கூட்டணிக் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்ள வாய்ப்புள்ளதால், இந்த அரசு எந்த நேரத்திலும் கவிழக்கூடும் என அவர் எச்சரித்தார். இந்த நிலையற்ற அரசியல் சூழலில், விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து வரும் பிற தேர்தல்களிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என்று அவர் அசைக்க முடியாத நம்பிக்கை தெரிவித்தார். இந்த வெற்றி இலக்கை அடைய, கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் எவ்வித வேறுபாடும் இன்றி முழு ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
