LATEST NEWS
அரவணைப்பா? ஆப்புவப்பதா?… 2031ல் நாங்க தான்.. தமிழ்நாட்டு அரசியலில் அரங்கேறும் புதிய போர்க்களம்!அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு…!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்ணாமலை தலைமையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநாடு நடைபெற்றது. இது பிற கட்சிகளை விமர்சிப்பதற்கோ அல்லது தற்போதைய அரசுக்கு குந்தகம் விளைவிப்பதற்கோ கூட்டப்பட்ட அரசியல் மாநாடு அல்ல என்றும், ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற ஒற்றை உயரிய நோக்கத்திற்காகவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சிக்க வேண்டும் எனப் பலரும் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், 2026-ல் மக்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ள புதிய அரசுக்கு முழு மரியாதை அளிக்க வேண்டியது அவசியம் என்றார். மூத்த உறுப்பினர் செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சர்கள் என்பதால், அவர்களைத் தாழ்த்தாமல் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முதிர்ச்சியான நிலைப்பாட்டை அண்ணாமலை வெளிப்படுத்தினார்.
முதலமைச்சர் விஜய் அவர்களை இனி ‘சிஎம் சார்’ என்றே மரியாதையுடன் அழைப்போம் எனக் குறிப்பிட்ட அவர், டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்த முக்கியப் பிரச்சனை ஒன்றையும் சுட்டிக்காட்டினார். பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக அரசு அறிவித்துள்ள போதிலும், தங்களது அமைப்பின் கள ஆய்வில் இன்னும் நூற்றுக்கணக்கான கடைகள் 100 மீட்டர் எல்லைக்குள் இயங்குவது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார். இருப்பினும், இதற்காக அரசின் மீது தேவையற்ற நெருக்கடிகளைத் திணிக்காமல், மிகவும் ஆரோக்கியமான முறையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்வு காணப்போவதாக அவர் உறுதியளித்தார்.
ஆணவத்துடன் அரசியல் செய்வோரை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு 2026 தேர்தலே சிறந்த உதாரணம் என அவர் தெரிவித்தார். எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் பயணிக்கும் இந்த அமைப்பு, எதிர்காலத்தில் ஒரு நேர்மையான அரசியல் கட்சியாக உருமாறி 2031-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் முன் நிற்கும் என அண்ணாமலை அறிவித்தார். அதிகார வெறிக்காக அல்லாமல், மக்களுக்குச் சிறந்த நிர்வாகத்தை வழங்கும் ஆக்கபூர்வமான அரசியலையே தாங்கள் முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறினார். மேலும், தற்போதைய தவெக அரசின் பதவிக்காலம் முடிவடையும் போது தமிழ்நாட்டின் கடன் சுமை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கும் என்றும், அந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மாநிலத்தை மீட்கும் பொறுப்பு தங்களையே சாரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
