LATEST NEWS
“இலங்கை பாஸ்போர்ட்… தமிழக ஓட்டர் ஐடி…! சென்னையில் வாக்கு செலுத்திய தம்பதி கைது… பின்னணி என்ன..?!”
இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 69 வயதான குணேஸ்வரன் மற்றும் அவரது மனைவி நாகுலாம்பிகை ஆகியோர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை தியாகராய நகரில் வசித்து வந்துள்ளனர். அங்கு சிறிய அளவில் நகைக்கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். இவர்களது மகள் மற்றும் குடும்பத்தினர் இலங்கையிலேயே வசித்து வரும் நிலையில், இந்த தம்பதியினர் இலங்கை பாஸ்போர்ட் மூலமாகவே தமிழகத்தில் தங்கி வந்துள்ளனர்.
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இவர்கள், இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் முறைகேடாக தமிழக வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று வைத்துள்ளனர். மேலும், இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி, சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலிலும் தங்களது வாக்கினைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் வெளிநாட்டவர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர்கள் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினர் சென்னை விமான நிலையம் வழியாக மீண்டும் இலங்கை செல்வதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் தமிழக வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததை விமான நிலைய அதிகாரிகள் தணிக்கையின் போது கண்டுபிடித்தனர். இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக ஓட்டளித்த குற்றத்திற்காக அந்த இலங்கை தம்பதியினர் இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
