LATEST NEWS
தாம்பத்தியத்திற்கு மறுத்த கணவர்..! காவல் நிலையம் சென்ற மனைவி… உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன..?!
திருமண வாழ்வில் ஏற்படும் பொருந்தாமை, இல்லறக் கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை ஆகியவற்றை, கொடுமைக்கான வழக்காக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் காவல்துறையில் பணிபுரியும் தம்பதிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி நான்கு மாதங்கள் ஆன நிலையில், தங்களுக்குள் தாம்பத்திய உறவு நடைபெறவில்லை என்று கூறி அப் பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 498A, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தப் பெண்ணின் கணவர் மீது காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனை எதிர்த்து கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தாம்பத்திய உறவு முழுமையடையாத நிலையை 498A பிரிவின் கீழ் கொடுமைச் செயலாகக் கருத முடியாது என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேவேளையில், தனது கணவர் “நாம் நண்பர்களாக மட்டும் இருப்போம்” என்று தொடர்ந்து கூறி வந்ததாகவும், அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார் என்றும் மனைவி குற்றம்சாட்டினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எம். நாகபிரசன்னா அமர்வு, குறுகிய கால திருமண வாழ்வில் கணவர் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை என்ற ஒரே குற்றச்சாட்டைக் கொண்டு இந்த வழக்கின் முழு கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியது. மேலும், திருமணப் பொருத்தமின்மை அல்லது தாம்பத்தியம் முழுமையடையாத நிலையை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொடுமையாக்கி வழக்கு தொடர முடியாது என்று தெளிவுபடுத்தி தீர்ப்பளித்தது.
