CRIME
பெரும் பயங்கரம்..! கர்ப்பிணிப் பெண், 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சுட்டுக்கொலை… கடைசியில் நடந்த ஷாக்… அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்..!!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஈரி நகரில், ஒரு வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில், 8 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இக்கொடூரச் செயலைச் செய்த 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர், தாக்குதலுக்குப் பிறகு தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை Perry Street-ல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது, வீட்டின் வாசலில் இரண்டு பெண்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வீட்டின் உள்ளே இருந்து தப்பியோடி அண்டை வீட்டாரிடம் உதவி கேட்க முயன்ற அந்த இரு பெண்களையும், துப்பாக்கிதாரி வெளியே துரத்தி வந்து கொடூரமாகச் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
அதன்பின்னர், வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசாரின் சிறப்புப் படை , முதற்தளத்தில் 1 வயது மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகளின் உடல்களைக் கண்டெடுத்தனர். மேலும், இரண்டாவது தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளுக்கு அருகே கர்ப்பிணிப் பெண் உட்பட மேலும் 4 பேரின் உடல்களும், தற்கொலை செய்துகொண்ட துப்பாக்கிதாரியின் உடலும் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்றும், ஒருவர் அவர்களது குடும்ப நண்பர் என்றும் ஈரி நகர போலீஸ் அதிகாரி ரிக் லோரா தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியாத நிலையில், துப்பாக்கிதாரியின் மனநலப் பாதிப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
