LATEST NEWS
“சொத்து பட்டியலை வெளியிடுங்க பார்ப்போம்..” மதுரை மேயருக்கு தவெக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடி சவால்..!!
மதுரை ஜீவா நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்ததுடன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் தனது அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தைரியமிருந்தால் தங்களது சொத்து பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் மதுரை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளதாகவும், பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்திற்காக முதலமைச்சர் சட்டமன்றத்தில் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், மக்களின் நம்பிக்கையைத் தவெக அரசு முழுமையாக நிறைவேற்றும் என்றும் உறுதியளித்தார். இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தேர்தலிலும் மக்கள் தவெக-விற்கு நூறு சதவீதம் வாக்களிப்பார்கள் என்றார். இனி தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இடமில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் முதல்வர் விஜயின் நல்லாட்சி மட்டுமே நிரந்தரமாகத் தொடரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, எதிர்க்கட்சியினரான மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரைக் கடுமையாக விமர்சித்த அவர், அவர்களின் சிந்தனை குடும்பச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மட்டுமே உள்ளதாகக் கூறினார். தமிழக மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
