CINEMA
“நடைப்பயிற்சி என்று கூறிவிட்டுப் பாலத்தில் இருந்து குதித்த கே.ராஜன்… கடைசி 2 மாதங்களாக நேர்ந்த அந்த சோகம்…!”அவரை வாட்டிய அந்த ‘மன அழுத்தம்’அதிர்ச்சி பின்னணி…!”
தமிழ் திரையுலகில் மூத்த தயாரிப்பாளராகவும், சினிமா சார்ந்த விவகாரங்களில் தனது துணிச்சலான கருத்துக்களைப் பேசி எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்தவருமான கே. ராஜன் (வயது 84) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் கிளம்பிய அவர், அடையாறு ஆற்றங்கரை அருகே கார் வரும்போது நிறுத்துமாறு கூறியுள்ளார். சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து விபரீத முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் இருந்து அவரது உடலைச் சடலமாக மீட்டனர்.
அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறுதியாக அவருடன் பயணித்த கார் ஓட்டுநரிடம் காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த சில காலமாகவே கே. ராஜன் தனது குடும்பத்தினருடன் பெரிதாகத் தொடர்பில்லாமல் தனியாக வசித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகவே அவர் இந்த இறுதி முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், எப்போதும் சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு முழங்கும் கே. ராஜன், கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகத் திரையுலகினர் தெரிவிக்கின்றனர். எதற்கும் அஞ்சாமல் மேடைகளில் கர்ஜித்த ஒரு மூத்த ஆளுமை, மன அழுத்தம் காரணமாகத் தனது வாழ்வை இப்படி முடித்துக்கொண்டது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
