CINEMA
“காப்பி அடிச்சும் ஃபெயில்? ஆர்ஜே பாலாஜியை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்த ‘செகண்ட் ஷோ’ விமர்சனம்…!” “அட்லீயை விட மோசமா காப்பி அடிக்கிறாரா …!
நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்ஜே பாலாஜி எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகி சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாக்ஸ் ஆபீஸில் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு எதிரான ஒரு காட்டமான விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘செகண்ட் ஷோ தமிழ்’ என்ற எக்ஸ் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர், ‘கருப்பு’ திரைப்படம் பல திரையுலகப் படங்களில் இருந்து அப்பட்டமாக ‘உருவி சொருவி’ உருவாக்கப்பட்ட ஒரு படம் என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், பழைய படங்களின் காட்சிகளை நகலெடுக்கும் அட்லீ போன்ற இயக்குநர்களைக் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள், ஆர்ஜே பாலாஜி போன்றவர்களுக்கு மட்டும் ‘ப்ரீ பாஸ்’ (Free pass) கொடுத்து வேடிக்கை பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆர்ஜே பாலாஜியின் முந்தைய ஹிட் படமான ‘மூக்குத்தி அம்மன்’ கதையும், காட்சிகளும் ‘பிகே'(PK) இந்திப் படத்திலிருந்து அப்பட்டமாக காப்பி அடிக்கப்பட்டது என்றும், அதைச் சுட்டிக்காட்டியவர்களை ட்விட்டரில் ஆர்ஜே பாலாஜி பிளாக் செய்ததாகவும் அவர் சாடியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ‘கருப்பு’ படத்தில் ‘ஓ மை காட்’ , ‘காந்தாரா’, ‘லையர் லையர்’ போன்ற பல மொழிப் படங்களின் தாக்கங்கள் வகைதொகை இல்லாமல் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, கன்னடத்தில் வெளியாகிப் புகழ்பெற்ற ‘எஸ்எஸ்இ’ திரைப்படத்தின் மிக முக்கியமான, எமோஷனலான ஒரு பேருந்துக் காட்சியை, ‘கருப்பு’ படத்தில் நீதிமன்றக் காட்சியாக அப்பட்டமாக ‘கண்ட்ரோல் எக்ஸ், கண்ட்ரோல் வி’ செய்து வைத்துள்ளதாக அந்த நெட்டிசன் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். “இத்தனை படங்களில் இருந்து சீன்களைத் திருடி வைத்தும், படம் மிகவும் சுமாராகவே வந்துள்ளது. இதையெல்லாம் செய்துவிட்டு, பேட்டிகளில் நானும் என் ரைட்டர்ஸ் டீமும் பல மாதங்களாக மூளையைக் கசக்கிப் பிழிந்து உழைத்திருக்கிறோம் என்று ஆர்ஜே பாலாஜி கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, ‘கருப்பு’ படத்தில் இசைஞானி இளையராஜாவின் காப்பிரைட் விவகாரத்தை ஆர்ஜே பாலாஜி கிண்டல் செய்துள்ளதற்கு அந்தப் பதிவில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போராட்டத்தில் ‘போராடடா’ என்ற பாடலைப் பயன்படுத்தும்போது, அந்தப் போராட்டத்தையே நிறுத்தக் கோரி இளையராஜா வழக்குத் தொடுப்பது போல ஒரு காட்சியை ஆர்ஜே பாலாஜி வன்மத்துடன் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இளையராஜாவாவது தான் கம்போஸ் செய்த பாட்டுக்கு ராயல்டி கேட்கிறார்; ஆனால், தன் கேரியர் முழுக்க காப்பிரைட்டை மதிக்காமல் பிற மொழிப் படங்களை உருவி படம் எடுக்கும் ஆர்ஜே பாலாஜி அவரை கிண்டல் செய்வது நியாயமா?” என்று கேட்டுள்ள அந்த விமர்சனம் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.
