CINEMA
படம் ஹிட் அடித்தாலும் விடாத நெட்டிசன்கள்…!”அப்போ ஐபிஎல்-ஐ கிண்டல் பண்ணீங்க…! இப்போ இளையராஜாவா…!”ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்த நாம் தமிழர் கார்த்தி…!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் வணிகரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையிலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (Copyright) கோரிக்கையைத் தேவையின்றி கேலி செய்யும் விதமாக இத்திரைப்படத்தில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட போதிலும், சமூக வலைத்தளங்களில் இந்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜியைச் சாடி காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தை கேலி செய்ததற்காக படத்தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, இதே பாணியில் ஆர்.ஜே.பாலாஜி முன்பு செய்த மற்றொரு அரசியல் பகடியையும் நினைவுகூர்ந்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார். அப்போது, “ஐ.பி.எல்.-ஐ நிறுத்தினால் தண்ணி வந்துடுமா?” என ஆர்.ஜே.பாலாஜி கேலி பேசியதையும், பின்னர் அதைத் தனது ‘எல்.கே.ஜி’ திரைப்படத்தில் வசனமாக வைத்ததையும் கார்த்தி சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையில் மக்கள் கேளிக்கைகளில் மூழ்கியிருந்தால், “தமிழர்களுக்கு காவிரி முதன்மைச் சிக்கல் இல்லை” என கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வாதிட வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற அரசியல் காரணத்தினாலேயே அன்று ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் போராடியதாக அவர் விளக்கியுள்ளார்.
இறுதியாக, மண்ணுரிமைக்காக அன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 68 நாட்கள் புழல் சிறையில் இருந்தவன் என்ற முறையில் ஆர்.ஜே.பாலாஜியின் அந்தக் கேலி தனக்கு மிகுந்த வலியையும் கோபத்தையும் ஏற்படுத்தியதாக கார்த்தி குறிப்பிட்டுள்ளார். ஐயா இளையராஜா கோரும் காப்புரிமை என்பது அவரது உரிமை சார்ந்தது, அதில் கேலிக்கு இடமில்லை என்பதை ஆர்.ஜே.பாலாஜி இப்போது உணர்ந்து கொண்டது போல, அன்று அண்ணன் சீமான், பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டோர் முன்னெடுத்த காவிரிப் போராட்டத்தின் நியாயத்தையும், அதில் கிண்டலுக்கு இடமில்லை என்பதையும் அவர் இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் இடும்பாவனம் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
