CINEMA
85 வயதில் இப்படி ஒரு துயரமா…! பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை செய்ய என்ன காரணம்? கண்ணீரில் திரையுலகம் …!வெளியான அதிர்ச்சிப் பின்னணி…!
தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தருமான கே. ராஜன் (85), சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் குதித்து விபரீத முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் உலுக்கியுள்ளது. திரையுலகில் மிகவும் தைரியமானவராகவும், எதற்கும் அஞ்சாமல் பேசக்கூடியவராகவும் அறியப்பட்ட கே. ராஜன், இந்த வயோதிக மூப்பில் ஏன் இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா விழாக்களிலும், ஆடியோ வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொள்ளும்போது முன்னணி நடிகர்களின் அதிகப்படியான சம்பளக் குறைப்பு குறித்து மேடைகளிலேயே அழுத்தம் திருத்தமாக, ஆவேசமாகப் பேசி பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் கே. ராஜன். கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான ‘பிரமச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, 1991-ஆம் ஆண்டு சரத்குமார், நிழல்கள் ரவி நடிப்பில் வெளியான ‘நம்ம ஊரு மாரியம்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். சினிமா மீது கொண்ட அலாதி பற்றின் காரணமாக விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராகவும் உயர்ந்த அவர், கடந்த 2000-ஆம் ஆண்டு அப்பொறுப்பை ஏற்றார்.
தன் வாழ்நாளில் 4 படங்களைத் தயாரித்து, 2 படங்களை இயக்கி, 2 படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள கே. ராஜன், திரைப்படங்களில் நடிகராகவும் முகம் காட்டியுள்ளார். கடைசியாக, கடந்த 2023-ஆம் ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘பகாசூரன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். திரையுலகப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒரு மூத்த கலைஞர், தன் 85-வது வயதில் தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டது திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் மீளாத் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பல திரைப்பிரபலங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
