77 நாட்களில் முடிந்த ஆட்டம்…!”ஒரே ஆளுக்கு 2 தூக்கு தண்டனை!” – புதிய பி.என்.எஸ் (BNS) சட்டத்தில் தூத்துக்குடி கோர்ட் காட்டிய மரண மாஸ் அதிரடி…!தர்ம முனீஸ்வரன் கதையை முடித்த நீதிபதி பிரீத்தா…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

77 நாட்களில் முடிந்த ஆட்டம்…!”ஒரே ஆளுக்கு 2 தூக்கு தண்டனை!” – புதிய பி.என்.எஸ் (BNS) சட்டத்தில் தூத்துக்குடி கோர்ட் காட்டிய மரண மாஸ் அதிரடி…!தர்ம முனீஸ்வரன் கதையை முடித்த நீதிபதி பிரீத்தா…!

Published

on

தூத்துக்குடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றபோது காணாமல் போனார். மறுநாள் மார்ச் 11 அன்று அவர் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளியைக் கைது செய்யக் கோரி பொதுமக்கள் ஒரு வார காலம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனை போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 5ஆம் தேதி முதல் தீவிர விசாரணை நடைபெற்றது. மாவட்ட எஸ்பி மதன் தலைமையில் போலீஸார் முழு வேகத்தில் செயல்பட்டு 73 சாட்சிகளிடம் விசாரணையை நடத்தினர். அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த 21ஆம் தேதி புதன்கிழமை நிறைவடைந்த சூழலில், இன்று (மே 25, திங்கட்கிழமை) மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இந்த அதிரடித் தீர்ப்பை அறிவித்தார்.

Advertisement

நீதிபதி தனது தீர்ப்பில், புதிய சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 124-ன் கீழ் ஒரு தூக்கு தண்டனையும், போக்சோ (POCSO) சட்டப்பிரிவு 6-ன் கீழ் மற்றொரு தூக்கு தண்டனையும் என தர்ம முனீஸ்வரனுக்கு ‘இரட்டைத் தூக்கு தண்டனை’ மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இக்கொடூரச் சம்பவம் நடந்த 77 நாட்களிலேயே குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி தர்ம முனீஸ்வரன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு குறித்துப் பேசிய மாணவியின் தந்தை, “இது மிகவும் நல்ல தீர்ப்பு, சரியான தீர்ப்பு; இதேபோல் கோவையில் நடந்த சிறுமி கொலை வழக்கிலும் விரைவாக இதே போன்ற தீர்ப்பு வர வேண்டும். இனி இப்படி ஒரு கொடுமை எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாது” என்று உருக்கமாகக் கூறினார். சிறுமியின் வழக்கறிஞர் தாஸ் மற்றும் அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் ஆகியோர் கூறுகையில், “77 நாட்களில் இந்த வழக்கை முடித்துத் தூக்கு தண்டனை வாங்கித் தந்தது பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கும், உடன் பிறந்த சகோதரர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். பெண்கள் மீது பாலியல் குற்றங்கள் செய்ய நினைப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சவுக்கடியாகவும் பாடம் புகட்டுவதாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in