LATEST NEWS
“மனைவி மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல் …”தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்…”மதுவால் அழிந்த குடும்பம்…”தாயை காப்பாற்ற தந்தையை கொன்ற மகன்! – கரூரில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்!…”
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் தாட்கோ காலனி பகுதியில், குடிபோதையில் தாயைத் தாக்க முயன்ற தந்தையை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மோகன்ராஜ் என்ற விவசாயக் கூலி தொழிலாளிக்கு, பூவாயி என்ற மனைவியும், ஹரிதா என்ற மகளும், மணிகண்டன் (21) என்ற மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் மகன் மணிகண்டன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில காலமாக மோகன்ராஜ் குடிபோதைக்கு அடிமையாகி, தினந்தோறும் வீட்டிற்கு வந்து மனைவி, மகன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கம் போல கடந்த மே 21-ம் தேதி அன்று இரவு மோகன்ராஜ் அதிக போதையில் வீட்டிற்கு வந்து மனைவி பூவாயியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மோகன்ராஜ் மனைவி பூவாயி மீது மிளகாய் பொடியைத் தூவி, அவரைத் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மகன் மணிகண்டன் தந்தையைத் தடுக்க முயன்றபோதும், அவர் அடங்காமல் இருவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனால் நிலைகுலைந்த மணிகண்டன், தன் தாயைக் காப்பாற்றும் நோக்கில் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை மோகன்ராஜின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மோகன்ராஜ் தாக்கியதில் உள் காயமடைந்த பூவாயி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், மோகன்ராஜ் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அருகே சென்று பார்த்தபோது அவர் தலையில் காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து நங்கவரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூவாயி மற்றும் மணிகண்டன் இருவரும் தப்பிச் செல்லாதவாறு தீவிரப் போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.
