LATEST NEWS
“ஆட்சி மாறினாலும் சமையல் மாறாது…!”முதல்வர் ஜோசப் விஜய் – பிரதமர் மோடி சந்திப்பு…! டெல்லியில் தயாராகும் மாஸ் மதிய விருந்து…! சமைப்பது யார் தெரியுமா…!”
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தயாராகும் மதிய விருந்து மற்றும் பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜின் டெல்லி பயணம் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசு முறைப் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பிரச்சனைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், முதல்வர் மற்றும் அவருடன் சென்றுள்ள தமிழக அதிகாரிகளுக்கான மதிய உணவைச் சமைக்கும் பொறுப்பு மாதம்பட்டி ரங்கராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் தனது பிரத்யேக சமையல் குழுவினருடன் முன்கூட்டியே டெல்லி சென்று முகாமிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் டிரெண்டாகி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக திமுக அரசுடன் மிகவும் நெருக்கமாக அடையாளப்படுத்தப்பட்டு வந்த மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுடனும் இந்த அளவுக்கு நெருக்கம் காட்டி வருவதுதான் இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணமாகும். திமுக ஆட்சியின் போது, அறிவாலயத்தின் மிக முக்கிய குடும்ப விழாக்கள், அரசு சார்ந்த முக்கிய விருந்துகள், கட்சி மாநாடுகள் மற்றும் திமுக மேலிடத்தின் பிரத்யேக சுபகாரியங்கள் என அனைத்திற்கும் மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் குழுவினரே சமையல் ஒப்பந்தத்தைப் பெற்று வந்தனர். இந்தச் சூழலில், தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பும், டெல்லி போன்ற ஒரு முக்கியமான அரசு முறைப் பயணத்தில் முதல்வருக்கான உணவுப் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது.
இது குறித்துச் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. மாதம்பட்டி ரங்கராஜின் ஆதரவாளர்கள் இது வெறும் சமையல் சார்ந்த தொழில்முறை ஒப்பந்தம் மட்டுமே என்று கூறி வரும் நிலையில், விமர்சகர்களோ தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் புதிய அதிகார மையங்களுடன் தங்களை நெருக்கமாக வைத்துக் கொள்ளும் ஒரு வணிக உத்தி (Business Strategy) இது என விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஒருமுறை விஜய் சார்பாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு விருந்து சமைக்கப்பட்ட போதும், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பே உணவைத் தயார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெல்லி பயணத்தில், பிரதமருடனான சந்திப்புக்கு இணையாக இந்த சமையல் விவகாரமும் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
