LATEST NEWS
“9 ஆண்டுகளுக்குப் பின் அவலாஞ்சியில் வெளிவந்த மர்மம்! முட்புதருக்குள் மறைந்திருந்த ‘அந்த’ வெள்ளை புலி! அதிர்ச்சியில் வனத்துறை…!”நெஞ்சை பதறவைக்கும் அவலாஞ்சி காடுகளின் மர்மம்…!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அவலாஞ்சி வனப்பகுதி, எப்போதுமே மர்மங்களுக்கும் அரிய வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கும் பெயர் போன இடமாகும். இந்த சூழலில், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வனப்பகுதியில் மீண்டும் ஒரு வெள்ளை புலி தென்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அவலாஞ்சி மலைப் பகுதியில் வெள்ளை புலி ஒன்று நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். முட்புதருக்குள் நீண்ட நேரம் நின்றுவிட்டு, பின்னர் மலையைக் கடந்து செல்லும் அந்தப் புலியின் வீடியோ தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வரும் நிலையில், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே இது பெரும் எதிர்பார்ப்பையும் ஆச்சரியத்தையும் உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் அவலாஞ்சி பகுதியில் இரண்டு வெள்ளை புலிகளை நேரில் கண்டு புகைப்படம் எடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களைப் பொருத்தி கண்காணித்தபோது, இரண்டு வெள்ளை புலிகள் உட்பட மொத்தம் நான்கு புலிகளின் நடமாட்டம் அதில் பதிவாகி அதிகாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், சில நாட்களுக்குப் பிறகு அவற்றின் நடமாட்டம் கேமராவில் பதிவாகாததால் அவை வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. பின்னர் 2021-லும் இப்பகுதியில் வெள்ளை புலிகள் நடமாடியதாகத் தகவல் பரவியதே தவிர, அதை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்கள் ஏதும் அப்போது கிடைக்கவில்லை.
தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய வீடியோவின் உண்மைத்தன்மையை வனத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது. ஏனெனில், சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற வீடியோக்களில் பல பழைய வீடியோக்களாக இருக்க வாய்ப்புள்ளதால், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது அவசியம் என வனத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2018-ல் இரண்டு வெள்ளை புலிகள் இருந்த நிலையில், தற்போது ஒரே ஒரு புலி மட்டுமே தென்படுவது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, இப்போது தென்பட்டுள்ள புலி ஏற்கனவே பார்க்கப்பட்ட ஒன்றா அல்லது புதிய புலியா என்பதைக் கண்டறியவும், அதனைப் பாதுகாக்கவும் வனத்துறையினர் மீண்டும் தானியங்கி கேமராக்களைப் பொருத்தி தீவிர ஆய்வில் ஈடுபட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
