CINEMA
பாரதிராஜா மருத்துவமனையில் கண்ணீர் விட்டது ஏன்?…என் இனிய தமிழ் மக்களே..’ திரையுலக மூவேந்தர்களின் தலைவரை இழந்தோம்…மரணமே இல்லாத கலைஞன்… பாரதிராஜாவின் மறைவுக்கு கண்ணீர் வடித்த திருச்சி சிவா…!
“இயக்குநர் இமயம்” பாரதிராஜாவின் மறைவு தமிழகத்தில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் திமுக எம்.பி. திருச்சி சிவா, பாரதிராஜாவுக்குத் தனது ‘கலைப்பேரவை’ அமைப்பின் சார்பில் ஒரு பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது குறித்து மிகுந்த மனவேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தின் சிற்றூரிலிருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி ‘என் இனிய தமிழ் மக்களே!’ என்ற கம்பீரக் குரலோடு மக்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்திருந்த ஒரு பிதாமகனைத் தமிழ் சமூகம் இழந்துவிட்டது என அவர் உருகியுள்ளார்.
பாரதிராஜாவுடன் தனக்கிருந்த நெருங்கிய நட்பை நினைவுகூர்ந்த திருச்சி சிவா, பி.சுசீலா, கவிஞர் வாலி, இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் போன்ற பல சாதனையாளர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தான் விழா நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் பாரதிராஜாவுக்கும் ஒரு விழா நடத்த அவரிடம் சம்மதம் பெற்று, அதில் பங்கேற்கும் கலைஞர்களின் பட்டியலை அவரது மகன் மனோஜுடன் இணைந்து திட்டமிட்டுக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக மனோஜின் மறைவு பாரதிராஜாவை மனதளவிலும் உடலளவிலும் வதைத்ததால், அந்தப் பாராட்டு விழா கனவாகவே கலைந்துபோனது என்று அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
முதுமை மற்றும் நோய் பாதிப்பால் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை நேரில் சென்று பார்த்த நெகிழ்ச்சியான தருணத்தையும் திருச்சி சிவா விவரித்துள்ளார். அப்போது பேசும் திறனை இழந்திருந்த பாரதிராஜா, தனது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, கண்களில் வழிந்த கண்ணீரின் மூலமாகவே தனது அன்பை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். “கள்ளிக்காடு தந்த கலைப் பொக்கிஷமே! போய் வா!” எனப் பதிவிட்டுள்ள அவர், உடல் மறைந்தாலும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப, தனது அசாத்திய படைப்புகள் மற்றும் கம்பீரத்தின் மூலம் பாரதிராஜா காலமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று தனது இரங்கல் செய்தியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
