LATEST NEWS
“வேலைக்கு போகாமல் 35 லட்சம் ரூபாய்…” 11 மாத குழந்தையுடன் சிறை சென்ற தம்பதி…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி…!!
சென்னையில் உள்ள ஒரு முன்னணித் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியான லெட்டர் பேட் மற்றும் வரி விதிப்பு எண்களை (GST) உருவாக்கி, சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்களைப் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து மோசடி செய்த கும்பலை போரூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சட்டவிரோதச் செயலின் பின்னணியில் முக்கியக் குற்றவாளியாகச் செயல்பட்ட அப்துல் ரகீம் என்பவர், முன்பு அதே நிறுவனத்தில் பணியாற்றி விலகியவர் ஆவார்.
அவர் வேலையை விட்டு நின்ற விபரம் தெரியாமல் பல நிறுவனங்கள் பொருட்களை வழங்கிய நிலையில், அவற்றைச் சந்தையில் விற்று அவர் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்துள்ளார். பாதிக்கப்பட்ட நிறுவனம் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சாய் கணேஷ் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடியை வெளிக்கொண்டு வந்தது.
முன்னதாகப் பல இணையக் குற்றங்களில் ஈடுபட்டு இருமுறை கைதான அப்துல் ரகீமின் சொந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால், பணப் பரிவர்த்தனைகளுக்குத் தனது மனைவியின் கணக்கைப் பயன்படுத்தியுள்ளார். பின்னர் அதுவும் முடக்கப்பட்டதால், தனது உறவினர்களான முுக்தார் அகமது மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோரின் கணக்குகள் மூலமாகத் தொடர்ந்து முறைகேடான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளார்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் அப்துல் ரகீம், அவரது மனைவி ஆயிஷா மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் உட்பட மொத்தம் நான்கு பேரைப் போலீசார் சிறையிலடைத்தனர். கைதான தம்பதியினருக்கு 11 மாதக் குழந்தை ஒன்று உள்ள நிலையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்தக் குழந்தையுடனேயே அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
