LATEST NEWS
“கஞ்சாவை குக்கரில் பதுக்கிய நபர்…” விசிலோடு வந்த வாசனை… கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அடுத்த அடுப்புட்டி பகுதியில் வசிக்கும் பினீஷ் (40) என்பவர், தனது இல்லத்தில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடியாகச் சோதனையிட வந்த போலீசாரைக் கண்டதும் பதற்றமடைந்த அவர், கஞ்சா இருந்த நெகிழிப் பையைச் சமையலறையில் சாதம் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கருக்குள் மறைத்து வைத்துள்ளார். வீடு முழுவதும் தேடியும் ஆரம்பத்தில் போலீசாருக்கு எதுவும் கிடைக்காத நிலையில், அடுப்பிலிருந்த குக்கர் தொடர்ந்து விசில் சத்தம் எழுப்பியதோடு, அதிலிருந்து கஞ்சா புகையின் வாசனையும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
இதனால் பெரிதும் சந்தேகமடைந்த காவல் துறையினர், உடனடியாக அடுப்பிலிருந்து குக்கரை இறக்கித் திறந்து சோதித்தனர். அப்போது வெந்து கொண்டிருந்த சாதத்திற்கு நடுவே, பாக்கெட் வடிவில் கஞ்சா பதுக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். குக்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 401 கிராம் எடையுள்ள கஞ்சாவை உடனே பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாகப் போதைப்பொருள் பதுக்கிய குற்றத்திற்காகப் பினீஷை அதிரடியாகக் கைது செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
