LATEST NEWS
“திமுக தன் முகமூடியைத் தானே கழற்றி அம்பலமாகி நிற்கிறது” பதவி போனதும் புனித வேஷமா..? ஸ்டாலினை திருப்பி அடித்த தவெக..!!
தமிழகத்தில் தற்போதைய தவெக அரசுக்கு எதிராக நாளிதழ் ஒன்றில் வெளியான தலையங்கத்தை முன்வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக ஐடி விங் இடையே கடுமையான அறிக்கைப்போர் வெடித்துள்ளது. “ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கப் பார்க்கும் த.வெ.க. அரசு” என்று அந்தப் பத்திரிகை கட்டுரையில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த மு.க.ஸ்டாலின், “ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று தவெக அரசைச் சாடியிருந்தார்.
மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு தவெக ஐடி விங் சார்பில் எக்ஸ் பக்கத்தில் மிகவும் காரசாரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. “சம்பந்தமில்லாத விஷயங்களில்கூட மூக்கை நுழைத்து, மூக்கறுபட்டாலும் விளம்பரம் தேடும் மோகத்தில் ஸ்டாலின் சாரும் திமுகவும் ஊறிக்கிடக்கிறார்கள்” என்று அவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், தவெக ஆட்சி வந்த பிறகு ‘ஊழலின் ஊற்றுக்கண் அடைக்கப்படுகிறது’, ‘அரசு அலுவலகங்களில் நேர்மை வாசனை வீசுகிறது’ என்று பாரம்பரிய நாளிதழ்கள் பாராட்டி எழுதிய தலையங்கங்களை எல்லாம் ஸ்டாலின் படிக்கவில்லையா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீட் தேர்வு விவகாரம் மற்றும் டெல்லி மாணவர் போராட்டம் குறித்தும் திமுகவை தவெக கடுமையாகச் சாடியுள்ளது. “மாநில அரசுக்கு அதிகாரமே இல்லாதபோதும் ஓட்டு வாங்குவதற்காக நீட்டை நீக்குவோம் என்று பொய் சொல்லி ஏமாற்றியது யார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ள தவெக, மத்திய மந்திரி பதவிகளுக்காகப் பேரம் பேசிய திமுக, ஆரம்பத்திலேயே நீட்டைத் தடுக்கத் தவறிவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதிகாரம் பறிபோன பிறகு திமுக புனித வேடம் போடுவதாகவும், தங்களின் முகமூடியைத் தாங்களே கழற்றி அம்பலப்பட்டு நிற்பது திமுகவுக்குத் தொடர்கதையாகிவிட்டது என்றும் தவெக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
