LATEST NEWS
அமெரிக்காவுக்குப் பதிலடி தருவது உறுதி…! ஈரான் சபாநாயகர் ஆக்ரோஷம்..!அமெரிக்கா மீண்டும் அத்துமீறல்களில் ஈடுபட்டால்… பதிலடி இதைவிடப் பயங்கரமானதா இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது..!!!
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் விதியை முற்றிலும் மீறும் செயல் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. தங்களின் இந்தத் தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று கூறியுள்ள ஈரான், அமெரிக்கா மீண்டும் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டால், தங்களின் அடுத்தகட்ட பதிலடி இதைவிடப் பயங்கரமானதாகவும் மிக விரிவானதாகவும் இருக்கும் என்று எச்சரித்துள்ளது.
இந்த மோதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ஈரான் தனது அண்டை வளைகுடா நாடுகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கா தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வளைகுடா நாடுகள் தங்களின் நிலப்பகுதியையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அமெரிக்காவிற்கு எந்த வகையிலும் உதவக் கூடாது என்றும் ஈரான் அழுத்தம் கொடுத்துள்ளது. இந்தத் திடீர் மோதல்களால், இப்பகுதியில் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த அமைதி குலைந்து, போர்நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
