LATEST NEWS
முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த பாவா லட்சுமணன்…! உடனடியாக களமிறங்கி உதவிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்..!!
90-களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன். குறிப்பாக, ‘மாயி’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து இவர் செய்த காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படுபவை ஆகும். சமீப காலமாகத் திரைப்பட வாய்ப்புகள் இன்றித் தவித்த இவர், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு விபத்தினால் தனது கால் விரல்களை இழந்துவிட்டதாகவும், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் வறுமையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டதாகவும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு ஏதேனும் உதவி செய்யுமாறு முதலமைச்சர் விஜய்யிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நடிகர் பாவா லட்சுமணனின் இந்த இக்கட்டான சூழ்நிலையையும், தங்குவதற்கு இடமின்றி அவர் படும் துயரத்தையும் அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அவருக்கு உடனடியாக உதவ முன்வந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு எம்.எல்.ஏ. குடியிருப்பு வீட்டை, தங்குவதற்கு இடமின்றித் தவித்த பாவா லட்சுமணனுக்கு தற்காலிகமாக வழங்கியுள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன் அந்த வீட்டை பாவா லட்சுமணனிடம் ஒப்படைக்கும் போது, “இன்னும் ஆறு மாத காலத்திற்கு நீங்கள் இந்த வீட்டிலேயே தங்கி உங்களது உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்; அதற்குள் உங்களுக்கு நிரந்தரமாகச் சொந்த வீடு ஒன்றினை ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று உறுதியளித்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் இருந்த ஒரு கலைஞனுக்கு உதவிய அமைச்சரின் இந்த மனிதாபிமான செயல் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
