LATEST NEWS
“வாழ்க்கையே வெறுத்து போச்சு” வீட்ல இருந்து வேலை செஞ்சா டைம் மிச்சமாகுது… ஆனா நிம்மதி இல்லையே… WFH-ன் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இளைஞர்..!!
வீட்டிலிருந்தே வேலை செய்யும் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ முறை என்பது காலையில் சீக்கிரம் எழும் அவசரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் அலுவலக உடை கட்டுப்பாடு போன்ற எவ்வித அழுத்தமும் இல்லாத ஒரு சொகுசான பணி என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், இந்த வசதியின் மற்றொரு பக்கமாக இருக்கும் தனிமையைப் பற்றிப் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் நமன் என்ற இளைஞர், தான் கடந்த ஒரு மாதமாக வீட்டிலிருந்து வேலை செய்த அனுபவத்தைப் பகிர்ந்து, இந்த வேலை முறை குறித்த தனது எண்ணம் எவ்வாறு முற்றிலும் மாறியது என்பதை விளக்கியுள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்வது பயண நேரத்தை மிச்சப்படுத்தினாலும், அது ஒரு மனிதனை சமூகத்திடமிருந்து மெதுவாகத் தனிமைப்படுத்துகிறது என்று நமன் அதில் குறிப்பிட்டுள்ளார். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் பேசும் சிறிய உரையாடல்கள், தேநீர் இடைவேளையின் போது அடிக்கும் அரட்டைகள், ஒன்றாகச் சிரித்து மகிழ்வது மற்றும் வேலை சார்ந்த சிக்கல்களை உடனுக்குடன் விவாதிப்பது போன்ற மனிதத் தொடர்புகளை அவர் மிகவும் மிஸ் செய்வதாகக் கூறியுள்ளார். மனிதர்கள் வெறும் வேலை செய்யும் எந்திரங்கள் அல்ல; அவர்களுக்கு மற்றவர்களுடன் பேசுவதும் பழகுவதும் அவசியம் என்பதால், நாள் முழுவதும் எவ்வித சமூகத் தொடர்பும் இன்றி தனியாக இருப்பது மிகுந்த சலிப்பையும் தனிமையையும் உருவாக்குவதாக அவர் விவரித்துள்ளார்.
மனிதர்கள் எப்போதும் தங்களுக்குக் கிடைக்காத ஒன்றின் பின்னாலேயே ஓடுகிறார்கள் என்ற வாழ்க்கையின் எதார்த்தத்தையும் அவர் இதில் பகிர்ந்துள்ளார். வேலை இல்லாத போது வேலை வேண்டும் என்றும், வேலை கிடைத்த பிறகு அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படும் மனித மனம், ஒரு விருப்பம் நிறைவேறியவுடன் அடுத்ததை நோக்கிப் பாய்ந்து விடுகிறது. எனவே, எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அல்லது அடுத்த இலக்கை அடைவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், தற்போதைய தருணத்தை சிறப்பாக வாழ வேண்டும் என்றும், இறுதி இலக்கை விட அந்தப் பயணத்தை ரசித்து வாழப் பழக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ள கருத்து சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
