LATEST NEWS
“ரூ.50 ஆயிரம் கொடு!”.. வீடு கட்டும் பெண்ணை மிரட்டிய த.வெ.க நிர்வாகி… பரபரப்பு புகார்..த.வெ.க-வில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!
சென்னை திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர், கூலித் தொழில் செய்து சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சொந்தமாக வீடு கட்டத் தொடங்கியுள்ளார். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த வேளையில், வீட்டின் முன்பகுதித் தளம் சாலையை நோக்கி அமைந்ததால் அதனைச் சரிசெய்யும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த த.வெ.க வட்டச் செயலாளரான ராகுல் என்பவர், “நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளோம், எங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்” என்று கூறி, கடந்த மூன்று நாட்களாகக் கூலித் தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து, 50 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு மிரட்டியதாக அந்தப் பெண்மணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் கொடுத்துக் கூலித் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கி வரும் நிலையில், த.வெ.க நிர்வாகியின் இந்த மிரட்டலால் வீட்டைத் தொடர்ந்து கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண்மணி கண்ணீருடன் கூறியுள்ளார். தன் பிள்ளைகள் வாடகை வீட்டில் தங்கிப் படித்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இச்சம்பவம் குறித்துத் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ள அந்தப் பெண்மணி, தங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற வேதனையுடன் தனது உறவினர்களுடன் காவல் நிலையம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துத் தனக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
