CINEMA
“300 படங்கள் நடித்தும் இன்னும் அந்த ஒரு ஆசை நிறைவேறல.. யார் அந்தப் பெரிய நடிகர்?.. மேடையில் உருகிய யோகிபாபு”..!!
சின்னத்திரையில் அறிமுகமாகி, தனது வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் திறமையான நடிப்பால் கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர் யோகிபாபு. வடிவேலு, விவேக், சந்தானம் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் திரையில் தற்காலிகமாக ஒதுங்கியிருந்த சமயத்தில், அந்த வெற்றிடத்தைச் சரியாகப் பயன்படுத்தி, படத்திற்குப் படம் வெரைட்டி காட்டி வளர்ந்த அவர், தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ‘கோலமாவு கோகிலா’, தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும், ‘ஜெயிலர்’, ‘மாவீரன்’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பெரிய படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் காமெடி மற்றும் கேரக்டர் ரோல்களிலும் நடித்துத் தனது பன்முகத்திறமையை நிரூபித்து வருகிறார்.
அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாகவுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய யோகிபாபு, தனக்கு எப்போதும் கதையே முக்கியம் என்றும், மக்கள் தன்னிடம் எதிர்பார்ப்பதும் தனக்குச் சோறு போட்டதும் காமெடிதான் என்பதால் வாழ்நாள் முழுவதும் பெருமையோடு காமெடியைத் தொடர்வேன் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள போதிலும், உலகநாயகன் கமல்ஹாசனுடன் மட்டும் இன்னும் நடிக்க முடியாமல் இருக்கும் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், நல்ல கதைக்களத்துடன் வரும் புதிய இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்குத் திரையுலகில் உதவத் தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் அந்த மேடையில் உறுதியளித்துள்ளார்.
