LATEST NEWS
பதறிய எதிர்க்கட்சிகள்.. வன்கொடுமை தடுப்புக்கு முதல்வர் விஜய் உருவாக்கிய 45 பேர் கொண்ட மெகா படை.. தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பம்..!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு மறுசீரமைக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதித்துறையின் (முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை) கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்டக் குழு, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்து, சட்ட அமலாக்கத்தை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை உறுதி செய்யவும் தீவிரமாகச் செயல்படும்.
இப்புதிய குழுவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், அமைச்சர்கள் ராஜ்மோகன், பெ. விஸ்வநாதன், காந்திராஜ் உள்ளிட்டோர் முக்கிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மற்றும் அதிமுக எம்.பி தனபால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் 37 சட்டமன்ற உறுப்பினர்களை (MLAs) உள்ளடக்கி மொத்தம் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் இந்த உயர்மட்டக் குழு மிகவும் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் பட்டியலின மக்களின் பாதுகாப்பு, வன்கொடுமை வழக்குகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத் திட்டங்கள் குறித்த முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும்.
