LATEST NEWS
கட்டுப்பாட்டை இழக்கிறதா தவெக? முதலமைச்சர் விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்திய அமைச்சர்கள்… தலைமை அலுவலகம் போட்ட அதிரடி உத்தரவு…!!
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ள சூழலில், கட்சிக்குள் எழுந்துள்ள அதிகாரப் போட்டிகள் பகிரங்கமாகத் தெரியத் தொடங்கியுள்ளன. அரசு விழா ஒன்றில் பங்கேற்ற சொந்தக் கட்சி அமைச்சர்கள், தங்களின் ஈகோ காரணமாக மேடையிலேயே வெளிப்படையாக மோதிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சிப் பூசல், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குப் புதிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே பல்வேறு அரசியல் விவகாரங்களில் தவெக அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி நடக்க வைத்த நிகழ்வு அரசுக்கு எதிரான கண்டனங்களை அதிகப்படுத்தியது. அந்தச் சர்ச்சையின் சூடு தணிவதற்கு முன்பாகவே, அமைச்சர்களின் இந்தச் செயல் அரங்கேறியுள்ளது. இது கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டைத் தளர்வடையச் செய்வதோடு, மக்கள் மத்தியில் ஆட்சியின் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஆட்சியின் பிம்பத்தைச் சீர்குலைக்கும் வகையிலான இந்தத் தொடர் நிகழ்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவரக் கட்சித் தலைமை விரைந்து செயல்படத் தொடங்கியுள்ளது. இதன்படி, மோதலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப் பனையூர் தலைமை அலுவலகம் முடிவு செய்துள்ளது. அமைச்சர்களிடம் முறையான விளக்கம் கேட்கப்படுவதோடு, கட்சியின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தக் கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
