LATEST NEWS
“21ஆம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடூரமா? குடும்பத்திற்குள்ளேயே சீரழிக்கப்படும் ‘மோல்கி’ பெண்கள்… அதிர்ச்சி பின்னணி…!”
பெண்கள் முன்னேற்றம் பற்றி அதிகம் பேசப்படும் இன்றைய காலகட்டத்திலும், பெண்களுக்கு எதிரான பல சுரண்டல்கள் தொடர்கின்றன என்பதற்கு மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடைபெறும் ‘ததிச்சா’ என்ற வழக்கமே சாட்சியாகும். இங்கு பல தசாப்தங்களாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சந்தை அமைக்கப்பட்டு, அதில் குடும்பங்கள் தங்கள் சொந்த மகள்களையும் மனைவிகளையும் பிற ஆண்களுக்கு வாடகைக்கு விடும் செயல் அரங்கேறுகிறது. பெற்றோர்களின் சம்மதத்துடனும், சில நேரங்களில் திருமணமான கணவன்மார்களின் ஒப்புதலுடனும் நடைபெறும் இந்த சந்தையில், ஆண்கள் தங்களுக்குத் தேவையான பெண்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். வறுமை மற்றும் வரதட்சணை கொடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலைகளே இந்த நடைமுறைக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
திருமணமாகாத அல்லது மனைவி இல்லாத வசதியான ஆண்களுக்கு, 10, 50 அல்லது 100 ரூபாய் மதிப்பிலான முத்திரைத்தாள்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பெண்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள். ஒரு மணிநேரம் முதல் பல வருடங்கள் வரை என நிர்ணயிக்கப்படும் கால அளவைப் பொறுத்து பெண்களுக்கான விலை தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக 15,000 முதல் 25,000 ரூபாய் வரை விலை பேசப்பட்டாலும், 8 முதல் 15 வயதுக்குட்பட்ட கன்னிப் பெண்கள் மற்றும் அழகுடைய பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. முந்தைய ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, வயது, நிறம் போன்றவற்றின் அடிப்படையில் மற்ற பெண்களுக்கு விலை குறைக்கப்படுகிறது. ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் அதனைப் புதுப்பித்துக்கொள்ளவோ அல்லது அப்பெண்ணை வேறொரு நபருக்கு வாடகைக்கு விடவோ இந்த நடைமுறை அனுமதிக்கிறது.
இவ்வாறு சந்தைகளில் விலைபேசப்படும் பெண்கள் ‘பரோ’ அல்லது ‘மோல்கி’ என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களை வாங்கிய ஆண்களால் மட்டுமின்றி, பணம் கொடுத்து வாங்கியவர்கள் என்ற காரணத்தைக் காட்டி, அந்த குடும்பத்தில் உள்ள மாமனார் உள்ளிட்ட பிற ஆண்களாலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த நடைமுறையில் 6 வயது சிறுமிகள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கிராமத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது; எனினும், இது மறைமுகமாகத் தொடர்ந்து நடக்க வாய்ப்புள்ளதாகவே பல்வேறு தரப்பினராலும் நம்பப்படுகிறது.
