LATEST NEWS
வடக்கில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா..? தெற்கில் இருப்பவர்கள் யார்..? சட்டப்பேரவையில் கர்ஜித்த அமைச்சர் வன்னி அரசு..!!
தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்றுப் பேசிய அமைச்சர் வன்னி அரசு, இது ஒரு மகத்துவமான தீர்மானம் என்று குறிப்பிட்டார். பேசுகையில், “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற அறிஞர் அண்ணாவின் முழக்கத்தையும், “வடக்கில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்களா? தெற்கில் இருப்பவர்கள் மூன்றாம் தர மக்களா?” என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்வியையும் சுட்டிக்காட்டினார். மேலும், வட இந்தியாவை விட தென்னிந்திய மக்கள் முற்போக்கானவர்கள் மற்றும் நாகரீகமானவர்கள் என்று அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்துகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவின் நடவடிக்கைகள் வெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் பல்வேறு அரசியல் நோக்கங்கள் மறைந்திருப்பதாக வன்னி அரசு விமர்சித்தார். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முரண்பாடான நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறையை கொண்டுவர முயன்றபோது இந்தியா கூட்டணி அதனை எதிர்த்ததை நினைவு கூர்ந்தார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் இருந்து அதிக எம்பிக்கள் தேர்வாகி, அம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பிரதமராகும் சூழல் உருவாகி மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை பாதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
எதிர்காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் தொகுதி மறுவரையறையால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் வடக்கின் ஆளுகைக்குள் தெற்கு சுருக்கப்படும் நிலை ஒருபோதும் உருவாகக் கூடாது என்று வலியுறுத்திய அவர், தென்மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
