LATEST NEWS
அரசியல் பிழைப்பிற்காக… பனையூர் கேட்டில் காத்துக் கிடப்பார்…! செந்தில் பாலாஜிக்கு தவெக எம்.எல்.ஏ விடுத்த அதிரடி சவால்..!!!
தமிழகச் சபாநாயகருக்கு எதிராகத் தவெக கொண்டு வரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அரசுக்கு எதிராக வாக்களிக்க தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் ‘குதிரை பேர’ விவகாரம் வெடித்துள்ளது. இது தொடர்பாகத் தவெக உத்தங்கரை எம்.எல்.ஏ என். இளையராஜா சென்னை போலீசில் அளித்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சூழலில், செந்தில் பாலாஜியைத் தவெக எம்.எல்.ஏ இளையராஜா தற்பொழுது மிகக் கடுமையாக விமரிசித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக எம்.எல்.ஏ இளையராஜா, செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். எதிர்காலத்தில் தங்களின் அரசியல் பிழைப்பிற்காகவும் சுயநலத்திற்காகவும் தவெக-வின் கோட்டையான பனையூர் தலைமை அலுவலக வாசலில் செந்தில் பாலாஜி காத்துக் கிடக்கக்கூடிய நிலை ஏற்படும் என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க திமுக பின்னணியில் இருந்து சதி செய்வதாகவும், தவெகவின் எந்தவொரு தொண்டனையோ அல்லது மக்கள் பிரதிநிதியையோ யாராலும் விலைபேச முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.
இக்குதிரை பேர வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய யூடியூபர்கள் உட்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தவெக மற்றும் திமுக இடையே உள்ள அரசியல் பகையை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
