CRIME
“ஐய்யோ கொடுமையே…! கர்ப்பிணினு கூட பாக்காம இப்படியா பண்ணுவான்…?” ஓடும் ரயிலில் அரங்கேறிய கொடூரம்.. ‘ரயில் மதத்’ அலர்ட்டால் அதிரடி கைது..!!
டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கிச் சென்ற சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் மாவட்டம் கால்சினி பகுதியைச் சேர்ந்த 20 வயது பழங்குடியினப் பெண், டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக பழைய டெல்லி ரயில் நிலையத்திலிருந்து சிக்கிம் மகாநந்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். அவர் கர்ப்பிணியாக இருந்ததால், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் அந்தப் பெட்டியில் சில பயணிகள் இருந்த நிலையில், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் அவர்கள் இறங்கியுள்ளனர். இதனால் ஹசிமாரா ரயில் நிலையத்தைக் கடக்கும்போது அந்தப் பெட்டியில் அப்பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை கவனித்த அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது கவுதம் மகதோ என்ற நபர், சிலிகுரி சந்திப்பில் ரயிலில் ஏறி, பெட்டி காலியாக இருப்பதைப் பார்த்து உள்ளே சென்று அந்த கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பெட்டியில் பயணித்த ரயில்வே மின்சாரப் பிரிவு ஊழியர்கள் உடனடியாக ‘ரயில் மதத்’ அவசர உதவி சேவை மூலம் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது கணவரைச் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.
தகவலின் பேரில் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அரசு ரயில்வே போலீசாரும் அலிப்பூர்துவார் சந்திப்பு ரயில் நிலையத்தில் தயார் நிலையில் காத்திருந்தனர். இரவு சுமார் 9.20 மணியளவில் ரயில் அங்கு வந்தடைந்ததும், போலீசார் ரயிலைச் சுற்றிவளைத்து குற்றச்சாட்டுக்குள்ளான கவுதம் மகதோவை உடனடியாகக் கைது செய்தனர். படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் அலிப்பூர்துவார் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கவுதம் மகதோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
