LATEST NEWS
டேய் நில்லுடா…! சினிமா பாணியில் சேஸிங்… 80 கி.மீ வேகத்தில் துரத்திச் சென்று திருடனைச் சரித்த சகோதரிகள்…! இணையத்தில் குவியும் பாராட்டுகள்..!!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில், தங்களது கைபேசியைத் திருடிவிட்டுத் தப்பிச் செல்ல முயன்ற திருடனை, ஹர்ஷிதா மற்றும் ரசிதா அகர்வால் என்ற சகோதரிகள் தங்களது அபாரமான தைரியத்தையும் சமயோசித புத்தியையும் வெளிப்படுத்தித் துரத்திப் பிடித்தனர். முராரில் உள்ள சி.பி. காலனியைச் சேர்ந்த இந்தச் சகோதரிகள் ஸ்கூட்டரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, படவ் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட சோஃபா கேலரி அருகே பின்னால் பைக்கில் வந்த நபர் ஒருவர் ரசிதாவின் கையிலிருந்த கைபேசியைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.
பயந்து பின்வாங்காத சகோதரிகள், உடனடியாக அந்த நபரைத் தங்கள் ஸ்கூட்டரில் துரத்தத் தொடங்கினர். சோஃபா கேலரியில் இருந்து பூல்பாக் நோக்கி பரபரப்பான சாலைகள் வழியே சுமார் 80 கி.மீ வேகத்தில் பின்தொடர்ந்தனர். பூல்பாக் அருகே சந்தேக நபரின் பைக் முன்னால் ஒரு டெம்போ வந்ததால் அவர் திசைமாற முயன்றபோது, சகோதரிகள் தங்களது ஸ்கூட்டரால் அவரது பைக்கின் மீது மோதி அவரைக் கீழே தள்ளினர். பின்னர் அவனைப் பிடித்து கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவனைக் கட்டுப்படுத்தி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான காணொளியில் சகோதரிகள் அவனைத் தண்டிப்பது பதிவாகி, இணையவாசிகளின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
விசாரணையில், பிடிபட்ட நபர் பஞ்சாபைச் சேர்ந்த மன்பிரீத் என்றும், அவர் இரண்டு நாட்களுக்கு முன்புதான் குவாலியருக்கு வந்து டோமினோஸ் நிறுவனத்தில் டெலிவரி பையனாகச் சேர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அறை வாடகைக்கு பணம் தேவைப்பட்டதால் கைபேசியைத் திருடி விற்கத் திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். படவ் காவல் நிலையப் பொறுப்பாளர் சைலேந்திர பார்கவா இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அவருக்குப் பஞ்சாபில் ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா என்பதை உறுதிசெய்ய பஞ்சாப் காவல்துறையையும் தொடர்புகொண்டு வருகின்றனர்.
