LATEST NEWS
விஐபி பாதுகாப்பு நெறிமுறையா? திட்டமிட்ட அவமதிப்பா? கனிமொழி எம்பியை நடுவழியில் மறித்த போலீஸ்… தவெக – திமுக இடையே வெடித்த நேரடி மோதல்.. அரசியல் களத்தில் பரபரப்பு…!!
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 316-வது பிறந்தநாள் விழாவில் எதிர்பாராத அரசியல் பரபரப்பு அரங்கேறியுள்ளது. அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழியின் வாகனத்தை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். தவெகவைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ரீநாத் அப்போது நினைவிடத்திற்குள் இருந்ததால், பாதுகாப்பு விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி கனிமொழியின் கார் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
காவல்துறையினரின் இந்த திடீர் தடையால் அதிருப்தி அடைந்த திமுக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாகனத்தை அனுமதிக்க அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், எம்.பி கனிமொழி வீண் விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சுட்டெரிக்கும் வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தனது ஆதரவாளர்களுடன் நடந்தே சென்று மாவீரன் அழகுமுத்து கோனின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
சொந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அதுவும் ஒரு பெண் தலைவரை அமைச்சர் ஒருவருக்காக போலீசார் தடுத்து நிறுத்தி நடக்க வைத்தது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசியலில் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப்போர் மற்றும் அரசியல் ரீதியான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், கட்டாலங்குளத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் பகையை மேலும் தீவிரமடையச் செய்யும் ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
