LATEST NEWS
முதல் மாநாட்டிற்கே இப்படியா? சாதி, வாரிசு அரசியலுக்கு முடிவுரை?அலறும் கட்சிகள்… அண்ணாமலையின் அதிரடி ஆரம்பம்…!!
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை, வாரிசு மற்றும் சாதிய அரசியலுக்கு மாற்றாகத் தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் முதலாவது மாநில மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. “போதையில்லா தமிழகம்” என்ற உன்னத நோக்கத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த மாநாட்டுத் திடலின் பிரம்மாண்டத்தைக் காட்டும் ட்ரோன் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளன.
பொள்ளாச்சி நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஆட்சிப்பட்டி பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் சதுர அடி அளவில் அமைக்கப்பட்டுள்ள பிரதான பந்தலில், முதற்கட்டமாக 20,000 இருக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதிலுமிருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், தேவைக்கேற்ப உடனடியாகக் கூடுதல் இருக்கைகளை அமைக்கவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், மாநாட்டின் நுழைவாயிலானது பொள்ளாச்சியின் அடையாளங்களான ஆழியார் அணை, தென்னை விவசாயம் மற்றும் காற்றாலைகள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் வகையில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க 3 பிரதான நுழைவாயில்களும் 14 துணை வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு வளாகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சிகள், மருத்துவ முகாம்கள், 40 தற்காலிகக் கழிப்பறைகள் மற்றும் அவசர உதவிக்காக 8 ஆம்புலன்ஸ்களுடன் கூடிய மருத்துவக் குழுவினர் என அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 20 லட்சம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ள நிலையில், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் மையங்களும், செல்பி பாயிண்டுகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான அரசியல் ஆரவாரங்கள் ஏதுமின்றி, அமைப்பின் ‘தலைமைச் சேவகராக’ அண்ணாமலை மிகவும் எளிமையான முறையில் மேடைக்கு வரவுள்ளார். கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், நாளை பிற்பகல் 2 மணிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாலை 5:30 மணிக்கு அண்ணாமலை சிறப்புரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
