LATEST NEWS
“காப்பாற்ற துடித்த வனத்துறை.. அணை பகுதியில்.. மயங்கி கிடந்த குட்டி யானைக்கு நேர்ந்த சோகம்..!!
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று உடலில் பல்வேறு காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம், காயம் அடைந்த குட்டி யானைக்கு தீவிரமாக முதலுதவி வழங்கி, மருந்து போட்டு சிகிச்சை அளித்தார். அதனைத் தொடர்ந்து, வனத்துறையினரும் மருத்துவக் குழுவினரும் அந்த யானையின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குட்டி யானை உடல்நலம் தேறிவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் அது பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால், வேறு ஏதேனும் வனவிலங்குகள் அதனைத் தாக்கினவா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, குட்டி யானையின் முகத்தில் இருந்த சுமார் 1 அடி நீளமுள்ள இரண்டு தந்தங்கள் முறைப்படி வெட்டி எடுக்கப்பட்டு, அதன் உடல் வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
