CRIME
“நம்பரை பிளாக் செஞ்சா கொன்றுவியா..?!” காதலை நிராகரித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மருந்தியல் படித்து வந்த 19 வயது மாணவி குஷி சாஹு. இவர் தனது கல்விச் செலவிற்காக அங்குள்ள ஒரு கஃபேயில் பகுதி நேரமாகவும் வேலை செய்து வந்தார். பலோடாபஜார் மாவட்டத்தைச் சேர்ந்த பிண்டு சாஹு என்ற இளைஞர் இவரைக் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். குஷி அவரது காதலை நிராகரித்து, அவரது தொலைபேசி எண்ணையும் முடக்கியதால், ஆத்திரமடைந்த பிண்டு சாஹு கடந்த ஒரு மாதமாக மாற்று எண்களிலிருந்து அழைத்து குஷிக்குத் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார்.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட பிண்டு சாஹு இணையம் வழியாக ஒரு கத்தியை வாங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, குஷியின் அறைத்தோழி வெளியே சென்றிருந்த சமயத்தில், அவர் தங்கியிருந்த வாடகை அறைக்குள் புகுந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிண்டு சாஹு, குஷியின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றதுடன், தான் கொண்டு வந்த கத்தியால் அவரது வயிறு, முதுகு மற்றும் கைகளில் சுமார் 10 முறை கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாகக் குஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, பிண்டு சாஹு குஷியின் சகோதரரை மிரட்டியதுடன், அவர் வேலை செய்த கஃபே உரிமையாளரிடம் சென்று, குஷியை வேலையை விட்டு நிறுத்திவிட்டு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துமாறு எச்சரித்துள்ளார். கொலைக்குப் பிறகு ராய்ப்பூர் நோக்கித் தப்பிச் சென்ற பிண்டு சாஹுவை சனிக்கிழமை அன்று காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், வழக்கை விசாரிப்பதற்காகக் குற்றம் நடந்த இடத்திற்கு அவரை நேரில் அழைத்துச் சென்று சம்பவங்களை மீண்டும் நடித்துக் காட்டச் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
