DISTRICT NEWS
இனி திறக்கவே முடியாது..! 18 பெண்கள் உயிரிழந்த விவகாரம்… இறால் ஆலைக்கு சீல்… அதிகாரிகளின் அதிரடி செயல்…!!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பெரும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி காலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் சிக்கி 18 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், 83 தொழிலாளர்கள் இந்த வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு, உடனடியாக தீயணைப்பு, பேரிடர் மீட்பு மற்றும் மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. எஃகு குழாய்களைப் பயன்படுத்தி, ஆலையில் தேங்கியிருந்த சுமார் 2.75 டன் அமோனியா வாயு மிகவும் பாதுகாப்பான முறையில் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
அபாயகரமான வாயு முற்றிலுமாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக அந்தத் தொழிற்சாலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஆலையை நிரந்தரமாக மூட அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதன் இறுதி நடவடிக்கையாக, இன்று வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் குழு, சம்பந்தப்பட்ட அந்த ஆலைக்கு நேரில் சென்று முழுமையாக சீல் வைத்து நிரந்தரமாக மூடியுள்ளனர்.
