DISTRICT NEWS
பள்ளிக்கூடமா? இல்லை ‘பார்’ ஆ?… அரசுப் பள்ளிக்குள் அத்துமீறிய குடிமகன்கள்… வகுப்பறை வாசலில் கிடந்த மதுபாட்டில்கள்… ஆசிரியர்கள் அதிர்ச்சி…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.குண்ணத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைந்து மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களும் ஆசிரியர்களும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளுக்கு அருகே மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடப்பதைக் கண்டு மிகுந்த வேதனை அடைந்தனர்.
கல்வி கற்கும் புனிதமான இடத்தில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. பள்ளி வளாகத்தில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாகவும், சமூக விரோதிகளின் இத்தகைய அத்துமீறல்கள் குழந்தைகளின் மனநலனையும் பாதுகாப்பையும் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகமும் பொதுமக்களும் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். பள்ளிக்குள் நுழைந்து இந்தச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இனி வருங்காலங்களில் பள்ளிப் பகுதியில் இரவு நேர ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
