LATEST NEWS
“இனி பா.ம.க-வில் இல்லை!”.. தவெக-விலிருந்து வந்த ரகசிய அழைப்பு?.. உண்மையை உடைத்த அருள்.. . தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியிருந்த நிறுவனர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் அண்மையில் முடிந்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்துள்ளனர். ஆனால், அன்புமணியின் தலைமைத்துவத்தை ஏற்பதில் கட்சிக்குள் இன்னும் சுமுகமான சூழல் ஏற்படவில்லை. ராமதாஸின் தீவிர விசுவாசியான முன்னாள் எம்.எல்.ஏ. அருள் தலைமையில் இயங்கும் ஒரு பிரிவினர், அன்புமணியைக் கட்சியின் தலைவராக்குவதற்குத் தங்களின் பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருள், அன்புமணியை இனி பாமகவின் தலைவராக ஏற்கப் போவதில்லை என்றும், வன்னிய மக்களும் அவரைப் புறக்கணிக்க வேண்டும். மேலும், ராமதாஸ் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் தாங்கள் மீண்டும் பாமகவிற்குத் திரும்பப் போவதில்லை என்றும், ராமதாஸ் தங்களுக்கு எப்போதும் தெய்வம் போன்றவர்தான் என்றும் அவர் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ள இவருக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அதிமுகவில் இணையுமாறு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் இளங்கோவன் அழைப்பு விடுத்ததாகவும், திமுகவின் முக்கிய பிரமுகர் மற்றும் தவெக தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பேசியுள்ளதாகவும் அருள் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தில் சேரத் தங்களுக்கு அழைப்பு வந்திருப்பதாகவும், முன்பு அன்புமணி தரப்பால் தடை போடப்பட்ட போதிலும் தற்போது தவெக தங்களுக்காகக் கதவைத் திறந்து வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ள நிலையில், விரைவில் புதிய கட்சியைத் தொடங்குவதா அல்லது தவெக உள்ளிட்ட வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்த இறுதி முடிவை முறைப்படி அறிவிக்கப் போவதாக அருள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
