LATEST NEWS
திமுக, அதிமுக, பாஜக-வுடன் ரகசிய டீல்.? அம்பாசமுத்திரத்தில் சீமான் அதிரடி மாஸ்டர் பிளான்… எம்.எல்.ஏ ஆக துடிக்கும் நாதக சீஃப்…!!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு நேரடியாகக் களமிறங்கும் முனைப்புடன் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். “இடைத்தேர்தலில் போட்டியிட வெறிக்கொண்டு காத்திருக்கிறேன்” என்று அவரே ஏற்கனவே அறிவித்திருப்பதால், இந்த முறை அவர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எனினும், வழக்கம்போல தனித்துப் போட்டியிட்டால் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் நிலவுவதால், இம்முறை திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளுடன் இணைந்து ஒரு ‘பொது வேட்பாளராக’ களம் காண சீமான் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறார்.
இந்த வியூகத்தின் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் தமக்குச் சாதகமாக முடிந்ததைத் தொடர்ந்து, நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற சீமான், அங்கு பாஜகவின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களுடன் நட்பு பாராட்டினார். மறுபுறம், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடனும் அவர் இணக்கமான உறவைப் பேணி வருகிறார். இறுதி நேரத்தில் கூட்டணிக் கணக்குகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், சீமான் மீண்டும் திமுக தரப்பிடம் பேசியபோது, “நீங்கள் உங்கள் பணிகளைத் தொடருங்கள், தேர்தல் நெருங்கும்போது முடிவெடுக்கலாம்” என்ற பதில் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுகவின் இந்த பதிலைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதியில் பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை நாம் தமிழர் கட்சி அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளது. மேலும், களத்தில் தங்களுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ள தவெக-வுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் சீமான் திட்டமிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தல் மூலமாக எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற சீமானின் அசுர வேக அரசியல் நகர்வுகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
