LATEST NEWS
நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி..! மரண ஓலத்திற்கு மத்தியில் மலர்ந்த நம்பிக்கை… வெள்ளத்தில் சிக்கிய இரட்டைக் குழந்தைகளை மீட்டு அரவணைத்த பெண் ராணுவ வீராங்கனைகள்..! இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ரசுவா மாவட்டத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 626 பேர் பலியாகியுள்ளனர். 2,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். நேபாள ராணுவத்துடன் இணைந்து மீட்புப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. முதலில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை மறுத்த நேபாளம், தற்போது உதவியை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதனிடையே மீட்புப் பணிகள் தொடர்பாக வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ள நிலையிலும், சிலர் உயிருடன் மீட்கப்படுவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய இரட்டைக் குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளை நேபாள ராணுவப் பெண் வீராங்கனைகள் தங்கள் கையில் ஏந்தியுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எங்கும் மரண ஓலம் ஒலிக்கும் நம்பிக்கையற்ற சூழலுக்கு மத்தியில் இந்த நிகழ்வு அழிவில் இருந்து மீளும் நம்பிக்கையை வழங்கி இருக்கிறது. மேலும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர் வீராங்கனைகளின் துணிச்சலையும் இது பறைசாற்றும் வண்ணம் அமைந்துள்ளது.
நேபாள ராணுவம் ரசுவா மாவட்டத்தில் இதுவரை 883 பேரைக் காப்பற்றியுள்ளது. இதில் மேல் திரிசூலி நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளும் அடங்குவர். வெள்ளப்பெருக்கில் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் மின் உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பள்ளத்தாக்கு கிராமங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு உதவி சென்று சேருவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. இதனிடையே சீனா – திபெத் எல்லையில் மேலும் ஒரு புதிய செயற்கை ஏரி உருவாகியுள்ளதும், அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கும் பனிப்பாறைகள் உடைந்து நீர் வேகமாக கீழ்நோக்கி வரும் ஆபத்து உள்ளதாலும் நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
