LATEST NEWS
திக் திக் காட்சி..! “நீர் பயிற்சியின் போது நடுஆற்றில் கவிழ்ந்த ராணுவப் படகு.. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 இந்திய வீரர்கள்… ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை…!!
ஹரியானா மாநிலம் யமுனாநகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது, ஆற்றின் பலத்த நீர்ச் சுழலில் சிக்கி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். இப்பகுதியில் ‘பாரா எஸ்.எஃப் / 1 பாராசூட் பட்டாலியன்’ சிறப்புப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் தண்ணீரில் மேற்கொள்ளப்படும் சிறப்புப் பயிற்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
பயிற்சியின் போது அவர்கள் பயன்படுத்திய மோட்டார் படகில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அது கட்டுப்பாட்டை இழந்து ஆற்று நீரின் அதிவேகக் கடுமையான ஓட்டத்தினால் ஆபத்தான பகுதியில் தலைகீழாகக் கவிழ்ந்தது. படகில் இருந்த வீரர்களில் 3 பேர் உடனடியாக நீந்திப் பத்திரமாகக் கரை திரும்பிய நிலையில், பலத்த நீரோட்டத்தில் சிக்கிய மற்ற இரண்டு வீரர்கள் ஆற்று நீரோடு அடித்துச் செல்லப்பட்டனர்.
தற்போது மாயமான அந்த வீரர்களைக் கண்டறியும் பணியில் ராணுவத்தின் சிறப்புப் படையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF & SDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேடுதல் பணியை எளிதாக்குவதற்காக மேற்கு யமுனா கால்வாயில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாகவும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
