LATEST NEWS
நீ யாருக்கு பிறந்த..? “H.ராஜாவுக்கும் ஆ.ராசாவுக்கும் என்ன வித்தியாசம்?” கொந்தளித்த அமைச்சர் வன்னி அரசு..!!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு ஆகியோரின் அவதூறான பேச்சுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் சமூகநீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு தனது ‘X’ பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்ட மேடையில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரைக் குறிவைத்து இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட சூழலில் இக்கண்டனம் எழுந்துள்ளது.
வன்னி அரசு தனது பதிவில், “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற உன்னதமான முழக்கத்தை முன்வைத்து வளர்ந்த திமுக, இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என்ற அய்யம் எழுகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், முன்னாள் ஒன்றிய அமைச்சரான ஆ.ராசா மேடையில் எழுப்பிய, பெண்களை இழிவுபடுத்தும் விதத்திலான ‘நீ யாருக்கு பிறந்த?’ என்ற கேள்வியைக் குறிப்பிட்டு, இது பெண்களைக் கொச்சைப்படுத்துவது ஆகாதா என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து திமுகவின் இந்த அநாகரிகப் போக்கை விமர்சித்துள்ள அவர், கடந்த காலங்களில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி குறித்து பாஜகவின் எச்.ராஜாவும், நாம் தமிழர் கட்சியின் சீமானும் இழிவாகப் பேசியபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னின்று கண்டித்ததை நினைவுகூர்ந்தார். தற்போது திமுகவினரே அதே போன்ற இழிவான உரையை ஆற்றியுள்ளதை விசிக வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட அவர், “பாஜகவின் எச்.ராஜாவுக்கும் திமுகவின் ஆ.ராசாவுக்கும் இப்போது என்ன வித்தியாசம் இருக்கிறது?” என மிகக் கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
