LATEST NEWS
“அடக்கொடுமையே… பள்ளிக்கூடமா இல்ல சித்திரவதைக் கூடமா..?” சுத்தியலால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்… கொதித்தெழுந்த பெற்றோர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள சஹஜன்வா காவல் எல்லைக்குட்பட்ட பத்ரகி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவதாகவும், ஒழுங்குபடுத்துவதாகவும் கூறி, ஆசிரியர் ஒருவர் கட்டிங் பிளேயரால் மாணவர்களின் காதைப் பிடித்து இழுத்தும், சுத்தியலால் அவர்களின் கால்களில் அடித்தும் காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய மாணவர்களின் காதுகளிலும் கால்களிலும் காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டபோதே ஆசிரியர் செய்த இந்தத் கொடூரச் செயல் வெளிப்பட்டது.
பள்ளியில் படிக்கும் அமர்ஜித் என்பவரது மகன்களான சஞ்சய் (4-ஆம் வகுப்பு) மற்றும் சத்தியவான் (5-ஆம் வகுப்பு) ஆகியோருடன், 3-ஆம் வகுப்பு படிக்கும் தீபக் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாணவர்களும் ஆசிரியரின் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை செய்தி அறிந்த பெற்றோர்கள், அன்று பள்ளி நேரம் முடிந்துவிட்டதால் உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தொடர்ந்து புதன்கிழமை காலையில், கோபமடைந்த பெற்றோர்களும் அப்பகுதி கிராம மக்களும் திரண்டு வந்து பள்ளி வளாகத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் குழந்தைகள் மீது இதுபோன்ற கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய வட்டாரக் கல்வி அலுவலர் யஜ்ஞ நாராயண் வர்மா, இச்சம்பவம் தொடர்பாகக் கல்வித் துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்தப் புகாரும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடமிருந்து அதிகாரப்பூர்வப் புகார் மனுப் பெறப்பட்டவுடன், அதுகுறித்து உடனடி விசாரணை நடத்தப்பட்டு, விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
