LATEST NEWS
“தேர்தல் ஆணையத்தில் மிகப்பெரிய முறைகேடு..?” தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாக தூக்க வேண்டும்… கொதிக்கும் முதல்வர் ஸ்டாலின்..!!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் பதவியில் தொடர அவருக்கு உரிமை இல்லை என்றும், SIR உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து 2 தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது; உடனடியாக அவர் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான மக்களின் பெயர்களை நீக்கும் முடிவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு அவசர கதியில் நடத்தப்பட்ட இந்தப் பணியில் பல குளறுபடிகள் நடந்தன என்றும் தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள் மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, இரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது என்றும், சுக்பிர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவருக்கும் தேர்தல் கமிஷனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் மறைத்து வைக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றமே தலையிட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சொன்ன பிறகும், அவர்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே கடந்த மார்ச் மாதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்ததை நினைவுபடுத்தியுள்ளார். எனவே, ஞானேஷ் குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும், SIR நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இதுவரை தேர்தல் ஆணையத்தில் நடந்த அனைத்தும் நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டு இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தி.மு.க. சார்பில் வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
