CRIME
பெங்களூருவில் பயங்கரம்..! காலி மனையில் பாயால் சுற்றிக் கிடந்த பெண் சடலம்.. 3 நாட்கள் வீட்டில் வைத்து கணவர் செய்த கொடூர காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
பெங்களூரு எம்.எஸ்.நகரின் அக்ரஹாரா லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில், கடந்த செப்டம்பர் 25 அன்று அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார், அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாக அவருடைய கணவரான சாகர் சந்திர ராவத் (32) என்பவரைக் கைது செய்துள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த தம்பதியரான இவர்கள், சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகிப் பிழைப்பிற்காகப் பெங்களூரு வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 11 அன்று, சம்ப்பிஹள்ளி வாடகை வீட்டில் பண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், சாகர் தனது மனைவி அனுசூயா பெஹாராவை (28) கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு மூன்று நாட்கள் சடலத்தை வீட்டிலேயே வைத்திருந்த அவர், ஆகஸ்ட் 16 அதிகாலை 3 மணியளவில் அடர்ந்த செடி கொடிகள் வளர்ந்திருந்த காலி மனையில் சடலத்தைப் பாயால் சுற்றி வீசிவிட்டு, தான் வேலை செய்யும் ஹோட்டலிலேயே தங்கித் தலைமறைவாகியுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாகச் சடலம் அழுகிக் கிடந்ததால், இறந்தவர் யார் என்பதைக் கண்டறிவது போலீசாருக்குப் பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அந்தப் பெண் அணிந்திருந்த ஆடையில் இருந்த ஒரு துணி டேக் போலீசாருக்கு முக்கிய ஆதாரமாகக் கிடைத்தது. அந்தத் டேக்கை ஆய்வு செய்த போலீசார், அது புவனேஸ்வரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் சொந்தமானது என்பதைக் கண்டுபிடித்தனர். அதன் விற்பனை விவரங்களை வைத்து இறந்தவர் அனுசூயா என்பதை உறுதிசெய்த போலீசார், தலைமறைவாக இருந்த கணவர் சாகரை அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது சம்ப்பிஹள்ளி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்; மேலும், சடலத்தின் அடையாளத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது
