LATEST NEWS
சூரியனுக்கு ஓட்டு போடணும்னு சொன்னேன்.. ஆனா விசிலுக்கு போடச்சொல்லி கட்டாயப்படுத்தினாங்க.. தாராபுரம் வாக்குச்சாவடியில் மூதாட்டி போட்ட வெடி…தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, கொளிஞ்சிவாடி பகுதியில் உள்ள 137-வது வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வாக்களிக்கச் சென்ற மூதாட்டி ஒருவர், தான் ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கு ஓட்டுப் போட விரும்பியதாகவும், ஆனால் அங்கு பணியில் இருந்த தேர்தல் அலுவலர் தன்னை விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தியதாக வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
நான் சூரியன் சின்ன த்திற்கு ஓட்டுப் போட வேண்டும் என்று கூறினேன். ஆனால், அங்கிருந்த அதிகாரி என்னை விசிலுக்கு அமுத்துமாறு கட்டாயப்படுத்தினார்” என்று அந்த மூதாட்டி ஆவேசத்துடன் தெரிவித்த புகார் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மின்னல் வேகத்தில் வைரலானது. இந்தச் சம்பவம் திமுக, அதிமுக மற்றும் தவெக கட்சியினரிடையே வாக்குச்சாவடி வளாகத்தில் திடீர் சலசலப்பையும், கடும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தீவிர விசாரணை நடத்தினர். மூதாட்டியின் புகாரைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறப்படும் தேர்தல் அலுவலர் தங்கமணி உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜம்மாள் என்ற புதிய அதிகாரி அந்த வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
